March 15, 2010

யார் மகாத்மா?


"மகாத்மா" என்ற உடனே நம் அனைவரின் நினைவிற்கு வருபவர் காந்தியடிகள் தான். ஆனால் அவரே தன்னை ஓர் அல்பாத்மா என்றுதான் கூறிக்கொண்டார். "பிறரால் செய்ய முடியாத எதையும் நான் செய்துவிடவில்லை, நீங்களெல்லோரும் செய்ய வேண்டும் என்று என்னிக்கொண்டிருப்பதை நான் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,முடிந்தவரை அதில் நான் வெற்றியும் பெற்றுக்கொண்டிருக்கிறேன். இது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்றுதான்". என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் எல்லோர் உள்ளத்திலும் நன்மை செய்யவேண்டும், நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது ஆனால் அவற்றை வெளிப்படுத்த அனைவரும் தயங்குகின்றனர். என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

காந்தியடிகளைப்பற்றி கூறும் போது அவர் "ஹரிச்சந்திர மயான காண்டம்" பார்த்தது முதல் "பொய் பேசாமல் வாழ வேண்டும்" என்று முடிவெடுத்ததாகக் கூறுவார்கள். இன்று நம் அனைவருக்கும் ஹரிச்சந்திரன் என்றால் பொய் பேசமாட்டார் என்ற அளவிற்காவது ஹரிச்சந்திரனைப்பற்றித் தெரியும். ஆனால் நாம் யாரும் பொய் பேசக்கூடாது என்று மனதில் நினைப்பதில்லையே. இவ்வாறு தான் நேர்மைப்பண்பும். நாம் யாரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே யாரேனும் ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அவரை நாம் வாழும் சமுதாயம் கிண்டல் செய்கிறது, ஏமாற்றுகிறது, முட்டாள் என்று பட்டம் சூட்டுகிறது. நாம் அனைவரும் சுயநலவாதிகளாகவும், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கிவிட்டோம். காந்தியடிகள் மகாத்மா அவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் இருக்கமுடியும் என்று இப்போது ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்துவிட்டோம். அவர்கள் மனத்திலும் நம்மால் எல்லாம் நேர்மையாக வாழ முடியாது என்ற எண்ணத்தை விதைத்துவிட்டோம். இனிமேல் யாரும் மகாத்மாவாக முயற்சி செய்யப்போவதில்லை. அதற்காக காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டம் தேவையில்லை என்று சொல்லவில்லை. அந்த பட்டத்தினால் அவருக்குப்பின் வேறொரு நேர்மையான மனிதர் தோன்றுவதற்கு அந்த பட்டம் தடையாக இருக்குமானால் அவரே விரும்பாத பட்டம் எதற்கு?
சாதாரண மனிதர்களான நம்மாலும் அவர் பின்பற்றியவற்றை பின்பற்ற முடியும். நாமும் இன்று நினைத்தாலும் நேர்மையான மனிதராக முடியும். இனிமேல் மகாத்மா என்ற பெயரால் நேர்மையான மனிதர்கள் உருவாவதை தடுக்காமல் இருப்போம். நாமும் நேர்மையாய் நடக்க முயல்வோம்.

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive