October 22, 2010

நான் என்ன செய்ய?....

நான் எந்த விஷயத்திலும் நன்கு யோசித்து நிதானமாக முடிவு எடுப்பவன். எனக்கு நண்பர்கள் அதிகம், நான் அனைவரிடத்திலும் உண்மையாக நடந்து கொள்வேன், அதேபோல் என் நண்பர்கள் எல்லோரும் என்னிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். நண்பர்கள் யாராவது என்னிடம் பொய் சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது ஒரு விஷயத்தில் நான் செய்வது சரியா? தவறா? என்று எனக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது அதை தீர்த்துக் கொள்ளத்தான் நான் இதை வலைப் பதிவில் எழுதி உங்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்...
என் கல்லூரிப் பருவத்தில் எனக்கு பழக்கமான மிகவும் நெருங்கிய தோழிகள் இருவர், நாங்கள் மூவரும் எங்களைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொண்டோம், எங்களுக்குள் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்று நான் பல சமயங்களில் நினைத்ததுண்டு. இப்படி எந்த தொந்தரவும் இன்றி எங்களின் நட்பு தொடர்ந்து கொண்டு இருந்தது... ஆனால் கடந்த சில மாதங்களாக இரு தோழிகளில் ஒருவள் என்னிடம் இருந்து கொஞ்சம் விலகிப் போவதாக நான் உணர்ந்தேன். காரணம் என்ன என்பதை முதலில் நான் அறியவில்லை, பின்னர் என் பிற நண்பர்களில் வாயிலாக அவள் ஒருவரை காதலிக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன். முதலில் அதனை நான் நம்பவில்லை, அப்படி ஏதேனும் இருந்தால் அவள் என்னிடம் தான் முதலில் கூறுவாள் என்று என் பிற நண்பர்களிடத்தில் எல்லாம் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த தோழி என்னிடம் எதையும் கூறவே இல்லை, மாறாக என்னை தவிர்க்கச்செய்தாள். பொறுத்து பொறுத்து பார்த்த நான் ஒரு கட்டத்தில் இன்னொரு நெருங்கிய தோழியிடம் கேட்டு விட்டேன்... முதலில் சொல்ல மறுத்த அவள் நான் மிகவும் வற்புறுத்தி கேட்டதால் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டாள். இவளிடம் மட்டும் அவள் எல்லா உண்மைகளையும் கூறி இருக்கிறாள்.
இப்போது என் தோழி என்னிடம் எந்த பொய்யும் கூறமாட்டாள் என்ற என் நம்பிக்கை பொய்யாகி விட்டது, அவள் என்னிடம் அதை கூறாமல் மறைக்கும் அளவிற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. மற்றொரு தோழி என்ன சொல்கிறாள் என்றால் 'உனக்கு தெரிந்தால் நீ தவறாக நினைத்துக் கொள்வாய் என்று கூட உன்னிடம் மறைத்து இருக்கலாம்' என்கிறாள். இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? அவளுடைய வாழ்க்கை, இதை முடிவு செய்யும் உரிமை அவளுக்கு இருக்கிறது, சொல்லப்போனால் அவள்தான் அவள் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும். எனது தோழிக்கு ஒரு நல்ல வாழ்வு அமையப்போகிறது என்றால் என்னை விட மிகவும் மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்கப் போவது இல்லை. இப்படி இருக்கையில் ஏன் என்னிடம் அவள் பொய் சொன்னாள்? என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது அவள் ஒருவரை காதலிக்கிறாள் என்பது எனக்கு தெரிந்து விட்டது என்பது அவளுக்கு தெரியும் ஆனாலும் என்னிடம் அதனை சொல்ல மாட்டேன் என்கிறாள், எதை கேட்டாலும் ஒரு பொய், ஒரு பொய்யினை மறைக்க இன்னொரு பொய், இப்படி பல பொய்கள் இன்று வரை. இப்போதெல்லாம் முன்பைப்போல் சரியாக் பேசுவது கூட கிடையாது. நான் அவளிடம் பேச சென்றாலே எங்கே நான் அவள் காதலைப் பற்றி கேட்டு விடுவேனோ என்று ஒதுங்கி சென்று விடுகிறாள். எப்போதும் அதே நினைவாகவே இருக்கிறது, எந்த வேளையிலும் கவனத்தை செலுத்த இயலவில்லை, சில வேளைகளில் என்னையும் மீறி அழுகை வந்து விடுகிறது. எனக்கு அவள் மேல் கோபம் ஒன்றும் கிடையாது, ஏன் என்னிடம் பொய் சொன்னாள்? என்னும் வருத்தம் தான்.

என்ன காரணத்திற்காக அவள் என்னிடம் பொய் சொல்லி இருப்பாள்? அவள் பக்கம் ஏதேனும் நியாயங்கள் இருக்குமா? அதை கூட என்னால் அவளிடம் நேராக கேட்க இயலவில்லை, நானே எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கமாக உள்ளது. எனக்கு பொய் சொன்னாள் பிடிக்காது என்று தெரிந்தும் பொய் கூறிய அவள் மீது வரும் கோபத்தையும் என்னால் தவிர்க்க முடியவில்லை, ஆனால் அவள் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற என் அக்கறையையும் தவிர்க்க முடியவில்லை, அவள் என்னை விட்டு விலகிப்போவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதே சமயம் முன்பைப்போல் இருக்கவும் என்னால் இயலவில்லை. நான் என்ன செய்ய? தயவு செய்து ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.... உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன், என் மன குழப்பத்தை தீர்க்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்...

2 comments:

ஸ்ரீ.... said...

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். சற்று நிதானமாகத் தனிமையில் சிந்தித்தால் உங்களுக்கே என்ன செய்ய வேண்டுமென்று புலப்படும். உங்களை விட உங்கள் வாழ்க்கைக்கு யார் சிறப்பாக யோசனை சொல்லிவிட முடியும்? பிரச்சனையிலிருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

மணிகண்டபிரபு said...

நன்றி ஸ்ரீ...

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive