September 10, 2010

அனுபவமே ஆணிவேர்...


எல்லோருக்கும் வணக்கம், வீட்ல உட்கார்ந்து தொலைக்காட்சி பாத்துக்கிட்டு இருந்தேன் சட்டுன்னு ஒரு விஷயம் தோனிச்சு அதான் எழுதிடலாம்னு....

மேட்டர் என்னன்னா?... வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவது எட்டுக் கல்வியா? இல்ல அனுபவக் கல்வியா?ங்கிறதுதான். சரி உள்ளே போலாமா?....

இந்த கேள்வி பல தலைமுறைகளாக கடத்தப்பட்டுக் கொண்டே வரும் ஒன்று. இந்த கேள்விக்கு விடை அறிய நாம் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்தோமானால் மிகவும் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும்.

"ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது" இது பல வருடங்களாக வழக்கில் இருக்கும் ஒரு பழமொழி. அனுபவத்தால் வெற்றி பெற்ற எல்லோரும் தவறாமல் உச்சரிக்கும் ஒரு பழமொழி. இந்த பழமொழி முற்றிலும் உண்மைதான் என்றாலும் இது இன்றைய கல்விமுறையும் கல்வி கர்ப்பவர்களையும் ஏளனம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

மறுபுறத்தில் இன்று கல்வி கற்றுக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் கல்வி கற்று அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள், அந்த கல்வியினால் பல அனுபவசாலிகளை விட பெரிய பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழுள்ள அனுபவம் மிக்கவர்களை வேலை வாங்குவதும் நடந்து கொண்டு தான் உள்ளது.

இப்படி அனுபவத்தால் வெற்றி பெற்றவர்கள் கல்வி கற்றவர்களை ஏளனம் செய்வதாலும், கல்வி கற்றவர்கள் அனுபவசாலிகளை ஏளனம் செய்வதும் மாறி மாறி நடந்து கொண்டே இருப்பதால் இந்த இரு சாராருக்கும் இடையே ஏற்ப்படும் காழ்ப்புணர்ச்சிகள் தான் இத்தகைய சர்ச்சைகள் உண்டாக காரணமாய் உள்ளன.

இன்று வழக்கத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துக் கொள்வோம், இதில் உள்ள கொள்கைகளும், கோட்பாடுகளும், வரையறைகளும் வேறு ஏதோ ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகவோ அல்லது முந்தைய கொள்கைகளிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட கொள்கைகளாகவோ தான் இருக்கும். அந்த குறிப்பிட்ட புத்தகத்திலுள்ள கருத்துக்கள் யாவும் அதற்கு முந்தைய வேறு ஒரு புத்தகத்திலிருந்து வருவிக்கப்பட்டு இருக்கலாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்றோமானால் முதன் முதலில் எழுதப்பட்ட புத்தகத்திலுள்ள கொள்கை, கருத்து அல்லது வரையறை இப்படி எதுவாயினும் மனிதன் தான் அறியாமல் செய்த செயலின் மூலம் விளைந்த அனுபவத்தை தான் பதிவு செய்து வைத்திருக்கிறான்.

எடுத்துக் காட்டிற்கு மின் விளக்கினை எரியச்செய்ய டங்ஸ்டன் மின்னிழையை தான் பயன்படுத்த வேண்டும், மின்சாரத்தை டங்ஸ்டன் மின்னிழை வழியாக பாயச்செய்ய வேண்டும் என்று இன்று புத்தகத்தில் ஒருவர் படிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், இந்த கோட்பாடு புத்தகத்தில் எப்படி இடம் பெற்றிருக்கும்?...

கிட்டத்தட்ட 80 வகையான பொருட்களை மின்ளவிக்கில் பயன்படுத்திய எடிசன் அவற்றிலெல்லாம் தோல்வி கண்டு இறுதியாக டங்ஸ்டன் மின்னிழையில் வெற்றி பெற்றார். "நான் 80௦ முறை தோல்வி அடைந்ததாக நினைக்க வில்லை 80 வகையான பொருட்களை இந்த விளக்கில் பயன்படுத்தக்கூடாது என்று அறிந்து கொண்டேன் என்று எடிசன் குறிப்பிடுகிறார்..."

"நான் 80௦ முறை தகுதியற்ற பொருட்களை பயன்படுத்தினேன் அதனால் எனக்கு நேர விரயமும், அதிக மன உளைச்சலும் ஏற்பட்டது, என்னைப்போல் நீங்களும் செய்ய வேண்டாம். நீங்கள் நேரடியாக டங்ஸ்டன் மின்னிழையை பயன்படுத்துங்கள் என்பது தான் அவர் அதனை பதிவு செய்து வைக்க காரணம். அந்த பதிவுதான் இன்று நமக்கு புத்தக வடிவில் கிடைக்கிறது.

நாங்கள் சந்தித்த பிரச்சினைகள் இவை, இவற்றை சரி செய்ய நாங்கள் கையாண்ட முறை இது. இதே போன்ற சூழ்நிலை உங்களுக்கும் ஏற்பட்டால் எங்கள் அனுபவங்களை கொஞ்சம் துணையாகக் கொண்டு செயல்படுங்கள், இது உங்கள் வெற்றியை கொஞ்சம் துரிதப்படுத்தும். என்பதுதான் அனுபவங்களை பதிவு செய்ய காரணம். விவசாயத்துறை முதல் விஞ்ஞானத்துறை வரை இன்றைய தலை முறையின் அனுபவங்களே அடுத்த தலைமுறையினருக்கு பாடங்களாய் அமைகின்ற. அப்படிஎன்றால் அனுபவசாலிகள் என்பவர்கள் நமக்கு முன்னோர்கள் தானா? நம் தலைமுறையில் இல்லையா? என்றால்.... புதியதாய் ஒரு செயலை செய்பவர்களும், ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களும், விளக்கினைத்தொட்டு கையில் சூடு பட்ட குழந்தையும், போட்டியில் பங்கு பெற்று வெற்றி அல்லது தோல்வி பெற்ற வீரனும், முதன் முதலாக திருடி மாட்டிக்கொண்ட திருடனும்.... இப்படி எல்லோருமே அனுபவசாலிகள் தான். முதலில் செய்பவன் தான் கொண்ட அறிவினை மட்டும் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான், பின்னால் வரும் சந்ததிகள் தங்கள் அறிவினையும் கொண்டு தங்கள் முன்னோர்களின் அனுபவங்களையும் துணையாகக் கொண்டு வெற்றி பெறுகிறார்கள். இந்த இரண்டும் தான் இன்று கல்வி கற்பதாகவும், கற்றவற்றை பயன்படுத்துவதாகவும் மாறியுள்ளன.

எனவே இங்கு அனுபவக்கல்வி, ஏட்டுக்கல்வி என்ற இரண்டு வார்தைகள் தேவையே இல்லை, நாம் கற்பவைகள் எல்லாமே பிறரின் அனுபவங்கள் தான். அவை ஒரு தனிமனிதனின் அனுபவமாகவும் இருக்காலாம், ஒரு குடும்பத்தின் அனுபவமாகவும் இருக்காலாம் அல்லது ஒரு சமுதாயத்தின் அனுபவமாகவும் இருக்கலாம். இந்த அனுபவங்களை பயன்படுத்தி அவற்றின் உதவியுடன் நாம் நமது வாழ்வையும், நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்வையும் வளமானதாக மற்ற முயற்சிப்பதும், அந்த முயற்சியில் வெற்றி பெறுவதுமே நம் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர நாம் புத்திசாலிகளா? அல்லது நம் முன்னோர்கள் புத்திசாலிகளா? என்று போட்டி போடுவது, அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகாது.

இன்றைய நவீன உலகத்திற்கும், நவநாகரிக மனிதனுக்கும், தொழில்நுட்ப புரட்சிக்கும் இன்னும் எல்லாவற்றிக்கும் அனுபவமே ஆணிவேர்....

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive