October 29, 2010

இப்படி செய்யலாமா?...

திருமணம் என்பது எல்லோருடைய வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த திருமணம் மணமக்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது, அல்லது தொடர்பு கொள்ளச்செய்கிறது. இதில் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள். பெற்றோருக்கு தங்களின் மகன் அல்லது மகளின் எதிர்கால வழக்கை பற்றிய கனவு, நண்பர்களுக்கு தங்களின் தோழி அல்லது தோழனின் வழக்கை துணை பற்றிய கனவு, உடன் பிறந்தவர்களுக்கு தங்களின் அண்ணி, மாமா ஆகியோரை பற்றிய கனவு, எல்லாவற்றிற்கும் மேல் ஆணுக்கு மனைவி பற்றிய கனவு, பெண்ணுக்கு கணவன் பற்றிய கனவு இந்த கனவுகளெல்லாம் கண்முன் நடக்க தொடங்கும் இடம் தான் திருமண மண்டபம். தொடங்கி வைக்கும் நிகழ்வுதான் திருமணம்.

இப்படி கனவுகளில் தொடங்கும் வாழ்வு சிலருக்கு கடைசி வரை கனவாகவே ஆகி விடுவதும் உண்டு. சிலருக்கு தங்கள் எதிர் பார்த்ததை விட ஒரு நல்ல வாழ்வு அமைவதும் உண்டு.

இதற்கு இப்போது என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.... விஷயம் இருக்கு, முந்தைய காலங்களில் திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகத்தான் இருந்தது, அப்போதும் ஒன்றிரண்டு காதல் திருமணங்கள் நடந்து இருக்கலாம், அனால் பெரும்பான்மை நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். இன்றைய திருமணங்களில் சரி பாதி அளவு ஏன்? பாதிக்கு மேல் கூட காதல் திருமணங்களாகி விட்டன. அதிலும் பெற்றோரின் எதிர்ப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை இன்று மிகவும் அதிகரித்து விட்டது.
இதில் ஒரு பகுதியினர் வீட்டில் தாங்கள் காதலிக்கும் விஷயத்தை பெற்றோரிடம் சொல்வதே கிடையாது, ஏதோ ஒரு கால கட்டத்தில் நிர்பந்தம் ஏற்படும் போது எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் வெளியே சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் தங்களின் செயல்கள் மூலம் வீட்டில் மாட்டிக் கொண்டு திருமண ஏற்பாடு செய்யும் போது கம்பி நீட்டி விடுகின்றனர், இப்படி வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பலவிதமாக புதிய புதிய யுக்திகளை கையாள்கின்றனர், சிலர் மட்டும் உண்மையாக நடக்க வேண்டும் என்று வீட்டில் சொல்லி, அது பெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் கிளப்பி விட்டு, பெரிய பிரளயங்கள் எல்லாம் நடந்து முடியும் வரை பொறுமையாய் இருந்து, தாங்கள் காதலித்தவரையே கை பிடிக்கின்றனர். பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை, எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் தங்கள் காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தட்ட வேண்டி உள்ளது.

பல காதலர்கள் தங்களின் மனங்களை கல்லாக்கிக் கொண்டு பெற்றோரை கலங்க வைத்து விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர், சில காதலர்கள் தங்களின் காதலை விட்டுக் கொடுத்து விட்டு பெற்றோருக்காக வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் தங்களின் பெற்றோரை இழக்க துணிவது வேறு வழி எதுவும் இல்லாத போது தான். இத்தகைய செயல்கள் பெற்றோருடைய மனத்திலும், பிள்ளைகளின் மனத்திலும் ஆறாத பல ரணங்களை உண்டாக்குகிறது என்பது மட்டும் உண்மை.

பெற்றோருடைய நம்பிக்கையையும், கனவுகளையும், கெளரவங்களையும் பிள்ளைகள் பாழக்குகின்றனர் என்று கதறும் பெற்றோர் ஒரு புறம். பிள்ளைகளின் ஆசையினையும், எண்ணங்களையும், மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்வது இல்லை, அவர்களுக்கு அவர்களின் சுய கெளரவம் தான் முக்கியம் என்னும் பிள்ளைகள் ஒருபுறம். இவற்றில் எது எப்படி இருந்தாலும் சரி, காதலர்கள் தங்களின் செயலுக்கு என்ன நியாயம் சொன்னாலும் சரி, எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உணர்வுகளுக்கு இடையிலான எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே சென்று பெற்றோரின் அனுமதியும், ஆசியும் இல்லாமல் திருமணம் செய்து கொள்வது சரியா? தவறா? தயவு செய்து இதற்கு உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive