July 22, 2012

இது தங்க பாண்டிக்காக....

"இனி இந்த போட்டியில நம்ம மாணிக்கத்த ஜெயிக்க எவனும் இல்லைடா..... இனி எல்லா வருஷமும் நாமலே தான் டா ஜெயிக்கபோறோம்...." என்று வெற்றி பெற்ற இறுமாப்பில் இசக்கி பேசியதை கேட்டு கொதிப்படைந்த வேலு... " ஏமாத்தி ஜெயிச்சிட்டு என்னடா இப்புடி பெருமை பேசிக்கிறே என் தங்கபாண்டி மட்டும் போட்டியில இருந்திருந்தா நீ இந்த இடத்துலேயே இருக்க முடியாது நினச்சிகோ" என்றான். "அட போடா அதெல்லாம் ஜெயிச்சவன் பேசணுமாடா... தோத்தவன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும் புரிஞ்சதா?..." "போன வட்டம் வரைக்கும் தடத்துக்குள்ள என் தங்கபாண்டிய எதிர்த்து யாரும் ஜெயிச்சது இல்ல, இந்த வட்டம் நீ ஜெயிச்சிட்ட அடுத்த வருஷம் என் பக்கத்துல இருந்து சின்னபாண்டிய கொண்டு வறேன். அடுத்த வருஷம் இதே நாள் இந்த போட்டியில சின்ன பாண்டி ஜெயிக்கிறான் டா... என்ன பந்தயம்?" என்று வேலு சவால் விட " அப்புடி மட்டும் என் மாணிக்கத்த தோக்கடிச்சிட்டு நீ ஜெயிச்சிட்டா இங்கே கொடுக்குற பரிசு இல்லாம எங்க வீட்டு லட்சுமிய உங்க சின்ன பாண்டிக்கே கொடுத்துடுறேண்டா... " இது தான் பந்தயம், சம்மதமா? "சபாஷ்... சரியான பந்தயம். அடுத்தவருஷம் லட்சுமி எங்க வீட்டு மருமகளாகிடுவா.." " அதை அடுத்த வட்டம் பார்த்துக்கலாம் டா..." என்று சவால் விட்டபடியே வேலுவும் இசக்கியும் பிரிந்தனர். இது நடந்து ஒரு ஆண்டு ஆகி விட்டது வருடா வருடம் ஊரில் திருவிழா வரும் பொது மாடு விடும் போட்டி நடைபெறுவது வழக்கம் அதே போல போட்டியில் வேலுவின் காளையான தங்கபாண்டி வெற்றிபெறுவதும் வழக்கம். கடந்த முறை இசக்கி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போட்டிநேரத்தில் தங்கபாண்டிக்கு விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து கொன்றுவிட்டதால் நடைபெற்ற சண்டையினால் தொடர்ந்து வேலுவினால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை, அன்று நடந்த நிகழ்விலிருந்து ஒரு ஆண்டு முழுவதும் சின்னபாண்டியை போட்டிக்கு தயார் செய்வதையே முழு நேர வேலையாகக்கொண்டான். அடுத்த ஆண்டு திருவிழாவும் வந்தது, போட்டிக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. வேலு தன் காளை சின்னபாடியை விட்டு பிரியவே இல்லை. " டேய் சின்னபாண்டி, நாளைக்கு போட்டி டா... போனவட்டம் நம்ம தங்கபாண்டியை அநியாயமா கொன்னுட்டானுங்க டா... இந்த தடவை தான் நீ முதல் முறையா போட்டியில கலந்துக போற உன் கிட்ட நிறைய முறை சொல்லிட்டேன் இருந்தாலும் இன்னொரு முறை சொல்றேன்..." "போட்டிக்கு நம்ம சுத்துப்பட்டு கிராமத்துல இருக்குற எல்லா ஆளுங்களும் காளைகளை கூட்டிட்டு வருவாங்க, நீ போட்டியில ஜெயிக்கணும்னா மொத்தம் 3 ரவுண்டு ஜெயிக்கணும் டா. மொதோ ரவுண்டு எல்லாருக்கும் பொதுவா நடக்கிறது பந்தய தூரம் மொத்தம் 100 மீட்டர் மாடு ஓடுறதுக்கு ரெண்டு பக்கமும் தட்டி, கம்பமெல்லாம் கட்டி வச்ச இடத்துக்கு பேருதான் தடம் னு சொல்லுவாங்க, நீ தடத்துல ஓடும் பொது உன் மூக்கணாங்கயிற அவுத்து விட்டுடுவேன் கொம்புல மட்டும் ஒரு கயிறு கட்டி நான் புடிச்சிக்குவேன். இருக்குற 50 தடத்துலயும் தனி தனியா மாடுங்கள விட்டுட்டே இருப்பாங்க, ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு நம்பர் கொடுத்து நீ எவ்ளோ சீக்கிரமா தடத்துல ஓடி வந்த னு நேரத்தையும் குறிச்சிகுவங்க" "மாட்டுக்கு சாராயம் கொடுக்க கூடாது, பின்னாடி ஊசி வச்சி குத்தகூடாது, வாலை பிடிச்சி கடிக்ககூடாது, சாட்டையால அடிச்சி ஓட வைக்க கூடாது, இதெல்லாம் கட்டுப்பாடு. மொதோ ரவுண்டு முடிச்சதும் 50 தடத்துலயும் மொத்தமா சேர்த்து முதல் 50 இடம் புடிச்ச காளைகளை அடுத்த ரவுண்டுக்கு அனுப்புவாங்க மத்த காளைகள் அவ்ளோ தான் அதுக்கு மேல போட்டியில தொடர முடியாது" "அதுக்கு அப்புறமா 10 நிமிஷம் இடைவேளை ரெண்டாவது ரவுண்டுக்கு.... "ரெண்டாவது ரவுண்டு அதே விதிமுறைகள் தான் இந்த ரவுண்டுல முதல்ல வரும் 10 காளைகளுக்கு தான் அடுத்த ரவுண்டுக்கு போகிற வாய்ப்பு கிடைக்கும். இது ரெண்டும் சுலபம் தான் மூணாவது ரவுண்டுல தடம் வேற இது கடைசி ரவுண்டுக்காக தனியா தயார் பண்ணுற தடம். தொடத்தொட நீளம் 200 மீட்டர். இந்த ரவுண்டுல எல்லா மாட்டையும் தனி தனியா விடுவாங்க ஆனா நேரத்த வெளியே சொல்ல மாட்டாங்க கடைசியில தான் சொல்லுவாங்க, இதுல உன் கொம்புல கட்டி இருக்கும் கயிறையும் நான் அவுத்துடுவேன் கூடவும் நான் வர மாட்டேன். நான் கொம்புல இருந்து கையை எடுத்துட்டு உன் மேல ஒரு தட்டு தட்டுவேன் உடனே நீ ஓட ஆரம்பிக்கணும் எல்லைக் கோடு வரை நீ நிக்காம ஓடிகிட்டே இரு அந்த பக்கம் நம்ம ஆளு ஒருத்தன் இருப்பான் அவன் உன்னை பிடிச்சிக்குவன். எல்லா மாடுகளும் ஓடி முடிச்ச உடனே முடிவு சொல்லிடுவாங்க யாரு கம்மி நேரத்துல ஓடி எல்லைய தாண்டி போறாங்களோ அவங்க தான் ஜெயிச்சதா அர்த்தம். அடுத்த வருஷம் வரை அந்த காலை தான் இந்த ஊருல ராஜா. ஜெயிக்கிற காளைக்கு ஊர் சார்பாகவும் பொது மக்களும் நிறைய பரிசு கொடுப்பாங்க அது பணமாகவோ பொருளாகவோ இருக்கும். ஆனா நமக்கு அந்த பணம் பொருளெல்லாம் முக்கியம் இல்ல டா இது நம்மக்கு கௌரவ பிரச்சனை. நாம இதுல ஜெயிச்சே ஆகணும் டா" என தன காளைக்கு எல்லா வற்றையும் கூறிக்கொண்டிருந்தான் "சரி நீ தூங்கு நாளைக்கு அப்போ தான் நல்ல ஓடி ஜெயிக்கமுடியும்" என்று காளையை கட்டி வைத்துவிட்டு அவனும் தூங்க சென்றான். கடந்த ஆண்டு நடந்த எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டே அவனும் சிறிது நேரத்தில் தூங்கி விட்டான். அடுத்த நாள்..... போட்டி தொடங்கியது.... ஊரே திரண்டு மாடு விடும் போட்டியை காண வந்து இருந்தனர். இளைஞர்கள் தங்கள் மாடுகளை அழைத்துக்கொண்டு பெருமிதத்துடன் போட்டி நடக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இளம் பெண்கள் உற்ச்சாகமாக அதனை வேடிக்கை பார்க்க கூடி இருந்தனர் வயதான பெண்கள் ஆங்காங்கே அமர்ந்தவாறும் தங்கள் பெண்களுக்கு துணையாகவும் நின்று கொண்டு இருந்தனர். வயதான ஆண்கள் மாடுகளை தயார் செய்து கொண்டும் தயார் செய்பவர்களுக்கு இலவசமாக அறிவுரைகளை கூறிக்கொண்டும் இருந்தனர். போட்டி நடத்தும் குழுவினர் மாடுகளை பரிசோதனை செய்து கொண்டும் ஒவ்வொன்றாக தடத்தில் ஓட விட்டுக்கொண்டும் இருந்தனர். இசக்கியும் வேலுவும் அவரவர் மாடுகளோடு வந்து இருந்தனர். இசக்கி தன வீட்டு லட்சுமியையும் அழைத்துக்கொண்டு வந்து இருந்தான். " என்ன டா தம்பி தோத்து போய்டுவோம் னு தெரிஞ்சி எங்க வீட்டுக்கு வர போற மருமகளையும் கூட்டிட்டே வந்துட்ட போல இருக்கு?" என வேலு உசுப்பேத்த... " அடேய், அதிகமா பேசாத டா எல்லாத்தையும் போட்டி முடிஞ்சா அப்புறம் பார்த்துக்கலாம்" என சொல்ல " அப்புறம் என்ன டா பார்க்கிறது.... டேய் தம்பி சின்ன பாண்டி இந்தா பர்த்துக டா இது தான் டா உன் சம்சாரம் லட்சுமி இன்னிக்கு நீ ஜெயிச்சதும் இந்த பொண்ணு நம்ம கூட நம்ம வீட்டுக்கு வந்துடும் டா அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்" என்று தன் காளைக்கு இசக்கியின் பசுவாகிய லட்சுமியை காண்பித்தான். சின்ன பாண்டியும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.... போட்டி முடிவு அடுத்த வாரம் ஞாயிறு அன்று அறிவிக்கப்படும்....

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive