October 30, 2010

எப்போது மாறும்?...

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி தான் மக்களாட்சி இப்படித்தான் நான் படித்த சமூக அறிவியல் புத்தகத்தில் மக்களாட்சிக்கு வரையறை இருந்தது. ஆனால் இன்றைய மக்களாட்சிக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

மக்களாட்சி என்பது என்ன? மக்கள் தங்களில் ஒருவரை தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து, தங்களின் குறைகளை முன்வைக்க சட்டசபைக்கு அனுப்புவது. அந்த ஒருவர் இந்திய குடிமகன்களில் யாராக வேண்டுமாலும் இருக்கலாம் என்பதற்காகத்தான் பொதுத் தேர்தல் முறை, ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது? தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது,தேதி அறிவிக்கப்பட்டவுடன் எல்லா அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தொகுதிக்கும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஒருவரை போட்டியிட வைக்கின்றனர், அந்த பலரில் எந்த கட்சி அதிகம் பணம் கொடுக்கிறார்களோ? அந்த கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்கின்றனர். எப்படி யார் அதிக பணம் கொடுக்கிறார் என்று மக்கள் அறிகின்றனர்? என்று நீங்கள் கேட்கலாம்... நம்மவர்கள் புத்திசாலிகள் தவறாக யாருக்கும் வாக்களித்து விடக் கூடாது என்று உண்மையை அறிந்து கொள்ள அனைத்து கட்சிக்காரர்களிடமும் பணம் வாங்குகிறார்கள்.

ஒருவகையில் நம் மக்கள் நேர்மையானவர்கள் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் வாக்களிக்கின்றனர். இங்கேயும் இந்திய குடிமகன்களில் ஒருவர் தான் சட்டமன்றத்திற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ செல்கிறார் ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, 'நான் தான் உங்கள் பிரதிநிதி' என்று மக்கள் மீது திணிக்கப்பட்டவர். இதை பற்றி சொல்லும் பொது ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது...

" ஊரில எல்லா பொருளோட விலையும் இப்புடி தாறு மாற ஏறி இருக்கே வருங்காலத்துல நாம எல்லாம் என்ன தான் பண்ண போறோமோ?"

"பொருட்கள் விலை ஏறினா என்னங்க? மக்கள் விலை மலிவாதானே இருக்கு?..."

"மக்கள் விலையா? என்ன சொல்றீங்க?...."

" ஆமா தேர்தல் நேரத்துல ஒரு ஓட்டுக்கு அதிக பட்சமா 5 ஆயிரம் ரூபா தறாங்க, ஒரு வருஷத்துக்கு ஆயிரம் ரூபா, இப்படி பார்த்தா ஒரு நாளுக்கு 3 ரூபா கூட வரலையே.... மனுஷன் விலை மலிவாதானே இருக்கு?...."

இது ஒரு சாதாரண ஜோக் தான். ஆனால் இதுக்குள்ள இருக்கும் விஷயங்கள் எவ்வளோ?நிறைய பேர் இத படிச்சிட்டு ஒன்னும் புரியாம விட்டுடுவாங்க, சிலருக்கு புரியும் ஆனால் பெருசா எதுவும் எடுத்துக்க மாட்டாங்க, படிச்சவங்க எல்லோருக்கும் இது என்னனு கண்டிப்பா புரியும் ஆனால் அவங்களுக்கு இதுக்கு எல்லாம் நேரம் இருப்பது இல்ல. சரி மேட்டருக்கு வருவோம்...இப்படி அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெற செலவு செய்யும் பணத்தின் அளவு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் செலவு செய்யும் பணத்தை விட ரெண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம்.

இவ்வளவு பணத்தை எந்த தைரியத்தில் இவர்கள் செலவு செய்கிறார்கள்?, இவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கே இருந்து வந்தது? இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அரசியல் கட்சிகள் செய்யும் ஊழல் பற்றி நான் வேற தனிய சொல்ல தேவை இல்ல. இப்போ ஹாட் நியூஸ் "காமன் வெல்த் போட்டியில் ஊழல்" இப்படி ஒவ்வொரு விஷயம் புதிதாக செய்யும் போதும் தொடக்கத்தில் சொதப்புவதும், பின்னர் ஒரு வழியா நடத்தி முடிக்கிறதும் நமக்கு பழக்கப் பட்ட விஷயம் தான். " போட்டி எல்லாம் நடந்து முடிஞ்சிடிச்சா? சரி ஊழல் கணக்கு பார்க்கணும் விசாரணை கமிஷன் வையுங்க" ன்னு கோர்ட் உத்தரவு போடுது, இது வழக்கமா நடக்கறது தானே ன்னு நாமும் கண்டுக்காம விட்டு விடுகிறோம்.

இப்போ எதுக்கு இதையெல்லாம் நீ சொல்றனு நீங்க கேட்கலாம்... இவ்வளவு தப்பு நடக்குது அதை யாரும் கேட்பது இல்லை, டைம் கிடைக்கும் போது இத பத்தி கொஞ்சம் பேசிட்டு ஆளாளுக்கு வேலைய பாத்துகிட்டு போயிடுறோம். ஏன் யாரும் கேட்பது இல்ல? ஆதாரம் இல்லாமலா? இல்லவே இல்ல. யார் யார் எவ்வளவு ஊழல் பண்ணி இருக்காங்கன்னு இங்கே பதவியில் இருப்பவர்கள், அரசாங்கத்தில் ஊழியர்களாக இருப்பவர்கள், நீதி மன்றத்தில் இருக்கும் நீதி பதிகள், விசாரணை கமிஷன் இல் இருப்பவர்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக் கொண்டு இருக்கும் படித்தவர்கள், எல்லாவற்றிக்கும் மேல் 'ஆளும் கட்சியினர் ஊழல் செய்து விட்டனர்' என்று சதா கூவிக்கொண்டே இருக்கும் எதிர்கட்சியினர் இப்படி எல்லோருக்கும் தெரியும். ஆனால் கேட்க மாட்டார்கள் ஏன் என்றால்? இங்கே அனைவரும் தவறு செய்துள்ளனர், செய்துகொண்டுள்ளனர், இன்னும் செய்வார்கள்.... இன்று இவர்கள் ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் மற்றொருவர் அவர்மீது குற்றம் சுமத்துவார்... இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் யாருமே யோக்கியர்கள் கிடையாது. இதில் பாவப்பட்டவர்கள் யார் என்றால்? நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், எல்லா வரிச்சுமைகளையும் சுமந்து கொண்டு, அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன மகனுக்கு சில கோடிகளை செலவு செய்து திருமணம் செய்யும் பொது தன் தொகுதி மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்தல் சந்தோஷமாக போய் சாப்பிட்டு விட்டு வரும் படிப்பறிவில்லாத அப்பாவி பொது மக்கள் தான்.

இவை எல்லாம் எப்போது மாறும்? யார் மாற்றுவது? என்று யோசிக்கலாம், இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறை வாரிசுகளை உருவாக்கி இங்கே நடப்பது மக்களாட்சி இல்லை, மன்னராட்சிதான் என்று நிரூபித்து விட்டனர். மீண்டும் மக்களாட்சியை கொண்டு வர வேண்டுமானால் இதுவரையில் அரசியலிலேயே இல்லாத உண்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நுழைய வேண்டும். அது எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இன்னும் பல ஆண்டுகள கூட ஆகலாம், ஆனால் அப்படி ஒரு நிலை வர வேண்டும், அதற்கு மக்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும், சினிமாவை பார்த்து முதல்வரை தேர்ந்தெடுக்கும் மக்கள் கொஞ்சம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் உயிரோடு இல்லாதவருக்கு கூட நம் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து விடுவார்கள், எல்லாவற்றையும் குறை கூறிக்கொண்டே இருக்கும் ஒரு சாரார் மாற வேண்டும், இன்றைய அரசியலின் வரையறை கொஞ்சம் மாற வேண்டும், அதற்கு அரசியலமைப்பு சட்டம் கொஞ்சம் மாற்றப்பட வேண்டும், இன்றைய அரசியல் வாதிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது மாற வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு தனிமனிதனும் மாறவேண்டும். எதிர்பார்க்கும் மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டால் வரும் காலத்தில் மற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படியே இருந்தால் என் சந்ததியினரும் இதே போன்ற கட்டுரையை வேறு வேறு வடிவத்தில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.....

2 comments:

ஞாஞளஙலாழன் said...

அருமையான பதிவு நண்பரே.
ஆனால் இப்போது நடப்பதும் மக்களாட்சி தானே. என்ன, மக்கள் பணம் வாங்கிக் கொண்டு தவறாக வாக்களிக்கிறார்கள். இங்கே தவறு யார் மேல்?
வேட்பாளர் எவருமே நல்லவர் இல்லையென்றால் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கலாம்.
ஆனால் ஓன்று. நல்லவனுக்குத் தான் நல்ல தலைவன் கிடைப்பான். இங்கே பெரும்பாலானவர்கள் ஏமாற்றுக்காரர்களே. எ.கா. படித்தவர்கள் கூட வரிசையில் நிற்க வேண்டிய இடங்களில், கொஞ்சம் பணம் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறார்கள். போலீசுக்கு லஞ்சம கொடுக்காமல் பாஸ்போர்ட் எடுத்த ஒருவரைக் கட்ட முடியுமா?

மணிகண்டபிரபு said...

படித்தவர்கள் தங்கள் வேலைகளை முடிக்க லஞ்சம் கொடுகின்றனர், படிக்காதவர்களும் அதையேதான் செய்கின்றனர் இவர்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடு என்ன என்றால்? கொடுக்கும் பணத்தின் அளவுதான். எல்லோரும் லஞ்சம் கொடுகிறார்கள் இன்றைய சூழ்நிலையில் நமக்கு லஞ்சம் கொடுக்காமல் யாரும் பாஸ்போர்ட் வாங்க முடியாது, என்னதான் சட்டம் பேசினாலும் இறுதியில் நம்மிடம் தான் வந்தாக வேண்டும் என்று எல்லா காவல்துறை அதிகாரிகளும் அறிந்து வைத்துள்ளனர். அதுவும் தவிர அவர்கள் அந்த வேலையே பெறவும் லஞ்சம் கொடுத்துள்ளனர். யார் கண்டது? நாளை நானே கூட லஞ்சம் கொடுக்காத காரணத்தால் பாஸ்போர்ட் எடுக்க இயலாமல் போகலாம், அல்லது வேறு வழி இன்றி லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கலாம்.

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive