September 10, 2010

எரி தழல் ஏந்தி வா!



வலைப்பதிவுல எழுதி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது இத்துனை நாட்கள் எழுதாமல் இருந்ததற்கு மன்னிக்கணும், இனிமேலே இப்படி நடக்காம பாத்துக்கறேன். இப்போ இந்த கவிதை....

எரி தழல் ஏந்தி வா!
சமுதாயத்தில் நிகழும் சங்கடங்களை எரிக்க
நியாயங்களாக்கப்படும் அநியாயங்களை எரிக்க
நீதிகளாக்கப்படும் அநீதிகளை எரிக்க
முறைகளாக்கப்படும் வன்முறைகளை எரிக்க
கொள்கைகளாக்கப்படும் கொள்ளைகளை எரிக்க
மாக்களாகிக்கொண்டிருக்கும் மக்களை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

தெருவிற்கு தெரு ஆலயங்கள் இருந்தும்
ஆசிரமங்களை தேடிச் செல்பவர்களையும்
மாதா மாதம் புதியதாய் தோன்றும்
மடங்களை நோக்கிச் செல்லும் மடங்களையும் எரிக்க
செவ்வாய் கிரகத்தில் செட்டில் ஆகும் காலத்தில்
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்பவர்களையும்
நோட்டுக்குள் கிரகங்களுக்கு
வீட்டு வசதி வாரியம் நடத்திக்கொண்டு இருப்பவர்களையும்
அவர்களிடம்
ஏட்டை எடுத்து எங்கள் வாழ்க்கைப் பாட்டை பாடுங்கள்
என்று கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

மரங்களையும் கற்களையும் கடவுள்களாக்கி
எலிகளையும் பூனைகளையும் அவற்றிக்கு ஏவல்களாக்கி
பகுத்தறிவை பறிகொடுத்து பக்தி பிண்டங்களாய் வாழும்
மூடநம்பிக்கை மூட்டைகளை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

முதியோர்களை இல்லத்தில் சேர்க்காமல்
முதியோரில்லத்தில் சேர்க்கும்
மதிகெட்ட மகன்களை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

தமிழில் பேசினால் தனித்து விடப்படுகிறோம்
ஆங்கிலம் கலந்து கொண்டால் அனைத்துக்கொள்ளப்படுகிறோம்
கண்ணாடிக்காக கண்களை இழக்கப்போகும்
தமிங்கிலக் கிறுக்கர்களை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

வீதிக்கு வீதி வெவ்வேறு சாதி
இன்னும் விட்டால் வீட்டுக்கு வீடு
சமுதாயத்தை சீர்குலைக்க சதி செய்யும் சாதிகளை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

பசியால் வாடும் பச்சிளம் குழந்தை
அன்றாடம் உணவுக்கே அல்லாடும் அகதிகள்
ஏழ்மை வாழ்வின் ஏக்கம் ஒருபுறம்
பசிக்காத மனிதர்களுக்கு பலவகை உணவுகள்
பாதி இரவில் பாதி வெளிச்சத்தில்
சம்பிரதாயத்திற்கு சாப்பிடும் சீமான்கள்
செல்வச்செழிப்பின் செருக்கு ஒருபுறம்
இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

நவநாகரிகம் என்று அவமானங்களை ஏற்படுத்தி
பண்பாட்டை பாழ்படுத்தும் பண்பற்ற மனங்களை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

சாதியைச் சொல்லி காதலை எதிர்க்கும்
பாதகர்களை எரிக்க
எரி தழல் ஏந்தி வா!

மக்களுக்குள் தோன்றும் மாற்றங்களை எரிக்க
வன்முறைகளை தூண்டும் வாய்ப்புகளை எரிக்க
வேற்றுமைகளை தூண்டும் வேர்களை எரிக்க
காழ்ப்புணர்ச்சிகளை தூண்டும் காரணிகளை எரிக்க
முன்னேற்றப் பயிர் வளர
முட்டுக்கட்டையாய் இருக்கும்
களைகளை எரிக்க
சமதர்ம சமுதாயம் தோன்ற விடாமல்
சதிசெய்யும் சவால்களை எரித்து
வளமான வாழ்வையும் நலமான நாட்டையும் உருவாக்க
எரி தழல் ஏந்தி வா!

2 comments:

கவி அழகன் said...

அருமையான கவிதை நண்பரே மீள் வருகைக்கு நன்றி

மணிகண்டபிரபு said...

நன்றி நண்பரே...

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive