June 23, 2010

காதல் ஒன்றும் குற்றம் இல்லையே?...

காதல்.....

மனித இனம் தோன்றியதிலிருந்து இளமை மாறாமல் இருக்கும் ஒன்று. அதனுடனேயே இளமை மாறாமல் இருக்கும் இன்னொன்று காதலுக்கான எதிர்ப்பு. ஒவ்வொரு தலைமுறையிலும் காதலர்களுக்கு உன்னதமானதாக தோன்றும் காதல் அவர்களுடைய பெற்றோர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் ஏனோ? தவறானதாகவே தோன்றுகிறது. இலக்கிய காலம் முதல் இன்றுவரை காதல் சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இருந்து கொண்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன்.....

இந்தியாவின் வட மாநிலங்களில் "காப்" என்ற ஒரு ஜாதி அமைப்பு இருக்கின்றதாம். இவர்களின் ஜாதி கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருபவையாம். இந்த "காப்" ஜாதிக்குள் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றனவாம், அவற்றிற்கு கோத்திரம் என்று பெயர். இப்படி ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என்று உறவு. இவையெல்லாம் கூட மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் என்று விட்டு விடலாம். என்னை அதிர்ச்சி அடையச்செய்த செய்தி என்ன என்றால்?
இப்படி ஒரே ஜாதியை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் காதலிக்கக்கூடாதாம், அவ்வாறு காதலித்தால் அவர்களை கொன்று விடுவார்களாம். இந்த கொடுமைக்கு பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்பதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி அவர்களை கொல்வதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா? " honour killing".
இதற்கென்று அங்கே ஜாதி அமைப்பு பஞ்சாயத்துகள் உள்ளன. உத்திரப்பிரதேசமாநிலம் காசியாபத்திர்க்கு அருகில் உள்ள ஒரு கிராமம் 'அமர்கர்' அங்கே இப்படி ஒரே ஜாதி ஒரே கோத்திரத்தை சேர்ந்த 'பப்லு-குடியா' என்ற இருவரும் காதலித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று அறிந்த காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனை அறிந்த ஜாதி அமைப்பு அவர்கள் கண்டுபிடித்து கொண்டுவர உத்தரவிட்டுள்ளது. அதன்படி டெல்லியில் தங்கியிருந்த காதல் ஜோடியை கண்டுபிடித்து கொண்டு சென்று விசாரணை செய்து(ஏதோ கொலை குற்றம் செய்ததை போல) " நீங்கள் இருவரும் இந்த ஊருக்குள்ளேயே வரக்கூடாது, எங்காவது கண்காணாத இடத்திற்கு சென்று விடுங்கள், உடனடி செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாய் தருகிறோம் " என்று தீர்ப்பளித்து அனுப்பி விட்டார்கள். இப்படி தப்பித்த முதல் ஜோடி இவர்கள் தான்.

நேற்று ஒரு காதல் ஜோடி இந்த சமுதாயம் தங்களை சேர்த்து வைக்காது என்று ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். இப்படி தினமும் எத்தனையோ தற்கொலைகள்...

இது போன்ற நிலை வடநாடுகளில் மட்டும் இல்லை. தென்னிந்தியாவிலும் நடக்கின்றது. குறிப்பாக தென் தமிழக பகுதிகளான மதுரை, தேனி. திருநெல்வேலி, தூத்துக்குடி,... இந்த ஊர்களிலெல்லாம் ஒரு ஆணோ, பெண்ணோ காதலிப்பதாக தெரிந்தால் போதும்... வெட்டு குத்து தான். இவர்களின் மிகப்பிரபலமான வசனம் என்ன தெரியுமா? " முதல்ல சொல்லுவோம் கேட்கல அவங்கள கொல்லுவோம்" இப்படி கொல்லுவது இல்லையென்றால் ஊரை விட்டு துரத்தி விடுவது, அதுவும் இல்லையென்றால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது..... இப்படி எத்தனையோ வித விதமான தண்டனைகள். இவர்களுக்கெல்லாம் ஜாதியும், வெற்று கவுரவங்களும் தான் முக்கியம். இதற்கு சம்பந்தப்பட்டவர்களுடைய பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது.

இப்படி பெற்றோர்களையும் ஒரேயடியாக தவறு சொல்ல முடியாது. அவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஒரு வீட்டில் ஒருவர் கலப்பு திருமணம் செய்துகொள்ள விரும்பி, வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் என்றால்.... அந்த குடும்பத்திற்கே ஒரு அவப்பெயர் இந்த சமுதாயத்தால் சூட்டப்படுகிறது. அந்த அவப்பெயரினால் அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயலும் பொது பிரச்சினை வருகிறது. அந்த குடும்பம் முழுமையாக இந்த சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைக்கவும் பெற்றோர்கள் தங்களின் இரண்டு கண்களில் ஒன்றை இழக்க நேரிடுகிறது. அது மகனையோ அல்லது மகளையோ உயிருடன் இழப்பது அல்லது அவர்களின் உயிரையே எடுப்பது. இதில் அவர்களுக்கு வலி இருக்கத்தான் செய்யும் என்றாலும் அது தவிர்க்க முடியாததாகிறது.
இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை அவர்களை வாழவாவது விடலாம். அதை விட்டு விட்டு மற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு கொலை வரை செல்வது மிகவும் கொடுமையானது. இந்த நிலை மாற வேண்டும் . மாற்றம் பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டும் என்றால் இந்த சமுதாயம் முழுமையும் ஏற்பட வேண்டும். இந்த ஒட்டு மொத்த சமுதாயமும் மாறும் வரையில் காதலுக்கான எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கும்.

இதற்கு பெரிதாய் ஒன்றும் செய்யத்தேவையில்லை. மனித உணர்வுகளை புரிந்து கொண்டாலே போதும். குறைந்தபட்சம் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யலாம். என்னதான் ஜாதி போதையில் மூழ்கி இருந்தாலும் காதலித்ததற்க்காக கொலை செய்யப்படுவது மிகவும் கொடுமையான, மனிதத்தன்மையற்ற செயல். ஏனெனில் காதல் ஒன்றும் தண்டனைக்குரிய குற்றம் இல்லையே?...

5 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//குறிப்பாக தென் தமிழக பகுதிகளான மதுரை, தேனி. திருநெல்வேலி, தூத்துக்குடி,... இந்த ஊர்களிலெல்லாம் ஒரு ஆணோ, பெண்ணோ காதலிப்பதாக தெரிந்தால் போதும்... வெட்டு குத்து தான். இவர்களின் மிகப்பிரபலமான வசனம் என்ன தெரியுமா? " முதல்ல சொல்லுவோம் கேட்கல அவங்கள கொல்லுவோம்" இப்படி கொல்லுவது இல்லையென்றால் ஊரை விட்டு துரத்தி விடுவது, அதுவும் இல்லையென்றால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது..... //

நெசமாலும் நிஜம்..

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவு மணிகண்டன்..

மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது..

உனது எழுத்துநடையும், சொல்லும் விதமும் பாராட்டுக்குரியது..

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

உனது இடுகையுடன் தொடர்புடைய இடுகை..

“இவங்களுக்கு வேற வேலையில்ல.“

http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_28.html

மணிகண்டபிரபு said...

தங்களின் கருத்துகளுக்கு நன்றி.

elamthenral said...

மிக அருமையான பதிவு மணிகண்டன். வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...

மணிகண்டபிரபு said...

தங்களின் கருத்துகளுக்கு நன்றி.

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive